இந்தியாவில் போதை, மருத்துவம் இன்னும் வேறு எந்த காரணத்துக்காகவும் பயன்படுத்தக் கூடாத போதை பொருளான கஞ்சாவை, கனடா அரசு அந்த நாட்டில் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே பொழுதுபோக்கு போதைக்கும், மருத்துவத்துக்கும் கஞ்சாவை பயன்படுத்த ஒப்புதல் அளித்த நாடு தென் அமெரிக்காவிலுள்ள 'உருகுவே'தான். இதையடுத்து சட்டப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது கனடாதான். அமெரிக்கா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் மருத்துவத்திற்கு மட்டும் கஞ்சாவைப் பயன்படுத்த சட்டம் உள்ளது. மேலும் சில நாடுகளில் இதுபோன்று சட்டம் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் இது கடுமையாக எதிர்க்கப்படும் ஒரு போதைப் பொருளாகும்.
கனடாவில் 2001ஆம் ஆண்டிலிருந்தே மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா சட்டபூர்வமாக பயன்பாட்டில் இருந்து வந்தது. காலப்போக்கில் ஒயினை விட, கஞ்சா பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால், கள்ளச்சந்தைகளில் இதன் விற்பனை சூடுபிடிக்க, தேசதுரோகிகள் மட்டும் வளர்ந்து வந்தனர். இது மட்டுமல்லாமல், கனடா வாழ் மக்களும் கூட கஞ்சா அதிகாரபூர்வமாக்கப்பட வேண்டும் என்று பல வருடங்களாக போராட்டங்கள் நடத்தி வந்தனர். கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உலக அளவில் புகழ் பெற்ற தலைவர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். அதிலும் இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அவருக்கு மதிப்பு அதிகம். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பின்பு இதைப் பற்றி ஆலோசிப்பதாக ஜஸ்டின் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கஞ்சா செடியை வளர்க்கவும், முறையான அனுமதியுடன் விற்பனை செய்யவும், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு சிலரே கஞ்சா பயன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை கனடா நாடாளுமன்றத்தில் கஞ்சா பயன்பாட்டிற்கு என்று கேனபீஸ் மசோதா வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. செனட்டில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கஞ்சா பயன்படுத்தலாம் என்று பெரும்பாலானோர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கஞ்சாவைப் பயன்படுத்த அதில் சொல்லப்பட்ட கட்டுப்பாடுகள் என்னவென்றால், 18 வயதை எட்டாதவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது. இளைஞர்கள் 30 கிராம் கொண்ட கஞ்சாவை மட்டுமே வெளியில் பயன்படுத்த இயலும், மேலும் வீட்டில் நான்கு செடிகள் வரை பயிரிட்டு வளர்க்கலாம், கஞ்சாவை சட்டப்பூர்வமாக வியாபாரம் செய்யும் நிறுவனங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். இதில் சொல்லப்பட்டதை மீறி செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதை கனடா மக்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் ‘‘கஞ்சாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை சில கும்பல் சட்டவிரோதமாகக் கடத்தி வந்து விற்பனை செய்கிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கிறது. கஞ்சாவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம் தற்போது கள்ளச்சந்தை மாஃபியாக்களின் விற்பனை முடிவுக்கு வரும்’’ எனக் கூறினார். இந்த மசோதா இந்த வருட செப்டம்பர் மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.