அமெரிக்காவில் மூளையை உண்ணும் ‘அமீபா நோய்’ என அழைக்கப்படக்கூடிய ‘நெக்லேரியா பவுலேரி’ தொற்றுக்கு ஆளாகியுள்ளார் ஒருவர்.
ஒரு செல் உயிரினமான அமீபாவின் ஒரு வகை, மனித மூளைக்குள் சென்று நோய்த்தொற்றை ஏற்படுத்தி மனிதனை இறக்கவைக்கும் இயல்பு கொண்டது. இந்த வகையிலான அமீபாக்கள் மனிதனை தாக்குவது என்பது மிக அரிதான ஒரு விஷயாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்பதால், இதுகுறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அதிகமாக பரவக்கூடிய இந்த அமீபா தொற்று, அமெரிக்காவின் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவருக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் நீந்தும்போது மூக்கு வழியாக இந்த அமீபா அவரது உடலுக்குள் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மூளை வீக்கம் மற்றும் மூளை திசுக்களின் அழிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் இந்த அமீபா, ஏரி, குளம் போன்ற நன்னீர் பகுதிகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2009 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 30 பேருக்குப் பொழுதுபோக்கு நீர்நிலைகளிலிருந்தே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள நபருக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்த மக்கள் கவனமாக இருக்கும்படி ஃப்ளோரிடா மாகாண சுகாதாரத்துறை எக்காரிகை விடுத்துள்ளது. மேலும், குழாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீருடன் நாசித் தொடர்பை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் உள்ளூர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.