தை மாத முதல்நாளில் தமிழ்நாட்டில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்களும் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தவறுவதில்லை. அந்த வகையில் இங்கிலாந்து மெய்டென்கெட்டில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டிருக்கிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மெய்டென்கெட் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசுவா ரெனால்ட்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழாசிரியர் அமரகீதா ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் நூலை எம்.பி.க்கு பரிசாக வழங்கி உலகப்பொதுமறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். விழாவில், சிந்துசமவெளி நாகரீகத்தின் திராவிட பாரம்பரியத்தை அறியத்தந்த ஜான் மார்ஷலின் அகழ்வாய்வு நூற்றாண்டு நிறைவு நினைவுகூரப்பட்டது.
வாழை இலை விருந்தும், கலை நிகழ்ச்சிகளுமென அயல்நாட்டில் பிறந்து வளரும் தமிழின் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்ப் பண்பாடும், கலாச்சாரமும் அதன் பெருமையையும் கொண்டு செல்லும் பணி இனிதே நடந்தேறியது.