Skip to main content

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த இளைஞரின் கடைசி சிரிப்பு; பேஸ்புக் லைவ்வில் பதிவான உறைய வைக்கும் காட்சி

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

Live video of Nepal plane crash

 

நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பொக்காரா விமான நிலையத்திற்கு எட்டி ஏர்லைன்ஸ் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. 72 இருக்கைகள் கொண்ட விமானத்தில் 68 பயணிகளும் 4 ஊழியர்களும் பயணித்துள்ளனர். 

 

விமானம் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மோசமான வானிலையின் காரணமாக விபத்துக்குள்ளானது. பழைய விமான நிலையம்  மற்றும் பொக்காரா விமான நிலையத்திற்கு இடையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தது. பயங்கர விபத்து நிகழ்ந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது நெடுநேரமாகத் தெரியாமலிருந்தது. மீட்புக் குழுவினர் வந்த பின் தீயினை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில் 68 நபர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

 

விமானத்தில் பயணம் செய்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், கொரியாவைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 68 பேர் பயணம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 5 இந்தியர்களும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நேபாளத்தில் இன்று அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் விமானத்தில் பயணித்த இந்தியப் பயணி ஒருவர் விமானம் தரையிறங்கும் காட்சியை லைவ் வீடியோவாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த இளைஞர் வீடியோவின் துவக்கத்தில் மிக சந்தோஷமாக சிரித்தபடி கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டு வருகிறார். திடீரென நிலை தடுமாறும் விமானத்தினால் செல்போன் கீழே விழுகிறது. அதனைத் தொடர்ந்து தீப்பற்றி எரிகிறது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்கிறது. சில வினாடிகள் மட்டுமே இருக்கும் அந்தப் பதிவு காண்போரை அதிரச் செய்கிறது. தற்போது இப்பதிவு இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.


 

சார்ந்த செய்திகள்