
பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக கடலூர் கோட்ட அஞ்சல் துறை சார்பில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கரையில் பாரம்பரியத்தை பாதுகாக்க நடைப்பயணம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ம் தேதி பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் விதமாக உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடலூர் அஞ்சல் கோட்டத்தின் சார்பாக பிற்காலச் சோழ இளவரசர் இராஜாதித்த சோழனால் கி.பி. 10 ம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பாரம்பரிய சின்னமாக விளங்கும் வீராணம் ஏரியினை பாதுகாக்கும் விதமாகவும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் வகையில் கடலூர் அஞ்சல் கோட்டம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்ட பாரம்பரியத்தை பாதுகாப்போம் என்ற நடைப்பயணம் நடைபெற்றது.
இந்த பயணத்திற்கு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் எம்.கணேஷ் தலைமை தாங்கினார். நடைப்பயணம் லால்பேட்டை துணை அஞ்சல் நிலையத்தில் தொடங்கி வீராணம் ஏரிக்கரை சாலையில் திருசின்னபுரம் வழியாக 4 கி.மீ தூரத்தில் உள்ள நத்தமலையில் முடிவுற்றது. முன்னதாக திருசின்னபுரம் அனந்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் உள்ள குறிப்புகளை சோழமண்டல வரலாற்று தேடல் குழுவை சார்ந்த விக்ரமன் மற்றும் பூங்குழலி ஆகியோர் அஞ்சல் துறை பாரம்பரிய நடைப் பயண குழுவினருக்கு விளக்கி கூறினார்கள்.
அதேபோல் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் கலந்து கொண்டு வீராணம் ஏரியின் நீர் பாசன முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். சிதம்பரம் மேற்கு அஞ்சல் துறை உட்கோட்ட ஆய்வாளர் பாலமுரளி, லால்பேட்டை அஞ்சல் அதிகாரி காமராஜ் மற்றும் அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி வீராணம் ஏரியை பாதுகாப்போம் என கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.