![america](http://image.nakkheeran.in/cdn/farfuture/2tTPHjNyoew1Wl-bg_XnQhpjVCfqGHsof5EIaitrY_Y/1619693190/sites/default/files/inline-images/amerivca.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமானதை தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், தனது குடிமக்களை இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தது. இந்தநிலையில் தற்போது கரோனா பாதிப்பு மேலும் மோசமடைந்திருப்பதால் அமெரிக்க வெளியுறவுத்துறை, தனது நாட்டு குடிமக்களை இந்தியாவை விட்டு எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு தினமும் நேரடியாக 14 விமானங்கள் இருப்பதாகவும், துபாய் வழியாக மேலும் சில விமானங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளதோடு, இந்த விமான சேவைகளை பயன்படுத்தி இந்தியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.