இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், உலகின் சில நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அனைத்துவிதமான பயணங்களுக்கும் திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறை தொடர்பான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவசரமற்ற விஷயங்களுக்காக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரித்துவருவது, வங்கதேசத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தலாம் என அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.