உலகம் முழுவதிலும் கரோனாவிற்கெதிரான தடுப்பூசிகளில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியும் ஒன்று. தற்போது ஃபைசர் தடுப்பூசி இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில், தற்போது தடுப்பூசியின் மூன்றாவது டோஸை மக்களுக்கு செலுத்த ஃபைசர் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது.
மூன்றாவது டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோருவது குறித்து பைசர் நிறுவனம், மூன்றாவது டோஸ் செலுத்திய பிறகு, ஆன்டிபாடிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வது தங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. அதேநேரத்தில், மூன்றாவது டோஸ் அவசியமா அல்லது எப்போது மூன்றாவது டோஸை செலுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவு இல்லை எனவும் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும், மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (F.D.A) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "இரண்டு தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ள அமெரிக்கர்கள், மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ள தற்போது எந்த அவசியமும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.