இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிறன்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கும் அரசு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வன்முறை மூண்டது. இந்தச் சூழலில், பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக மகிந்த ராஜபக்ஷே அறிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷேவின் பூர்விக வீடு, அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான இடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருகோணமலை கடற்படை தளத்தில் குடும்பத்தினருடன் மகிந்த ராஜபக்ஷே பதுங்குவது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, அந்தப் பகுதியையும் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர். இதற்கிடையே, வெளிநாடு தப்பிச் செல்லும் திட்டத்தில் ராஜபக்சே உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மகிந்த ராஜபக்ஷேவை திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்ற பாதுகாப்பு துறை செயலாளர் கமல் குணரத்னே இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். மகிந்த ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லம் தாக்கப்பட்டதால் பாதுகாப்பிற்காக கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், நிலைமை சற்று சீரடைந்த பின்னர் அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கமல் குணரத்னே தெரிவித்துள்ளார்.