கனடா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது பள்ளி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்தில் முகம் மற்றும் கைகளில் கருப்பு மை பூசியபடி அவர் காட்சியளிக்கிறார். இதன் மூலம் ஜஸ்டின் ட்ரூடோ இனவெறியை வெளிப்படுத்தியதாக கூறி அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், “நான் எனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான வாய்ப்பை உருவாக்கவும், நிறவெறிக்கு எதிராகவும் பணிசெய்ய இருக்கிறேன். நான் எனது சிறுவயதில் பெரும் தவறு செய்துவிட்டேன். நான் அதைச் செய்திருக்கக் கூடாது என்று கருதுகிறேன். தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார்.