இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வியாழக்கிழமை ஹாரி - மேகன் தம்பதி இதுகுறித்து அவர்கள் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அந்த அறிக்கையில், "பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த வருட தொடக்கத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்து, சுயமாக சம்பாதித்து வாழ ஆசைப்படுகிறோம். அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.
இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தை சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்காக வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளோம். எங்களின் இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள்" என கூறியிருந்தனர்.
உலகம் முழுவதும் இவர்களின் இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவு குறித்து ஹாரி - மேகன் தம்பதி அரண்மனையில் யாருடனும் கலந்தாலோசிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.