தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவன கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டு இன்று உலகையே அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது கரோனா வைரஸ். ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் இவ்வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இதன் மூன்றாம் கட்ட பரிசோதனையில் இந்த தடுப்பூசி 60,000 பேருக்குச் செலுத்தப்பட்டிருந்தது. கரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் முதன்முறையாக அதிக அளவில் பரிசோதனையாளர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியாக இது பெயர்பெற்றது. இந்நிலையில், இந்த மருந்தைச் செலுத்திக்கொண்டு ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இந்த சோதனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.