சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு இதுவரை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து மைனஸ் 37 டாலர் என்ற விலையை எட்டியுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் முடங்கியுள்ள சூழலில், இதன் எதிரொலியாகவே கச்சா எண்ணெய் விலை இப்படிப்பட்ட வரலாறு காணாத விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்க்கான தேவை கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து குறைந்துவந்த காரணத்தால், எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ரஷ்யா மற்றும் ஒபெக் நாடுகள் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டன. எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்தும் இணைந்து நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தியைக் குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு இதுவரை வரலாறு காணாத அளவுக்கு சரிந்து மைனஸ் 37 டாலர் என்ற விலையை எட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் எண்ணெய் விற்பனையாளர்கள் அதை வாங்க வாங்குபவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய்யின் துணை உற்பத்திப் பொருளான இயற்கை வாயு சில நேரங்களில் பூஜ்ஜியத்தை விடக் குறைவான விலையில் விற்கப்படுவது வாடிக்கை. அனால் முதன்முறையாக தற்போது கச்சா எண்ணெய்யின் விலையும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுள்ளது எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.