16 கோடி மக்கள்தொகை கொண்ட வங்கதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகள் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் என பரபரப்பாக நடந்த இந்த தேர்தலில் ஆளும்கட்சி மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இது குறித்து கூறியுள்ள எதிர்க்கட்சிகள், 'இது ஒரு கேலிக்கூத்தான தேர்தல், இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்' என கூறியுள்ளன. வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே நடைபெற்ற மோதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.