தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (29.01.2024) ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call) கலந்து கொண்டு. தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாள்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனிதவளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்” எனத் தெரிவித்தார். இம்மாநாட்டில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர், டி.ஆர்.பி. ராஜா, கைடன்ஸ் (GUIDANCE) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அலுவலருமான வே.விஷ்ணு, ஸ்பெயின் நாட்டிற்கான இந்தியத் தூதர் தினேஷ் கே. பட்நாயக் மற்றும் ஸ்பெயின் நாட்டு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.