உலகக் கடன் இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதென சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் உலகக் கடன் 182 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என சர்வதேச செலவாணி நிதியம் கணித்திருந்தது. ஆனால், இதுவரை இல்லாத அளவு உலகக் கடன் உயர்ந்து 184 டிரில்லியன் என இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம் அறிவித்துள்ளது.
தோராயமாக உலகக் கடனில் தனிநபரின் கடன் 86,000 அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தனிநபர் கடன் தொகை என்பது, தனிநபர் வருமானத்தைவிட இரண்டரை மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிகக் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளது எனவும், மற்றும் மொத்த கடனில் இந்த மூன்று நாடுகள்தான் பாதிக்கும் மேலான கடனை வாங்கியுள்ளது எனவும் சர்வதேச செலவாணி நிதியம் தெரிவித்துள்ளது.
மொத்த உலக கடனான 184 டிரில்லியன் அமெரிக்க டாலரை சதவிகிதத்தில் கணக்கிட்டால் 2017-ன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 225% என்பது குறிப்பிடத்தக்கது.