உலக வங்கியின் துணை அமைப்பான சர்வதேச நாணய நிதியத்திற்கு (ஐ.எம்.எப்) முதன்முறையாக இந்திய பெண் ஒருவர் தலைமை ஏற்றுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட கீதா கோபிநாத் ஐ.எம்.எப் அமைப்பின் முதல் பெண் தலைமைப் பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஎம்எஃப் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பதவியேற்கும் 11-வது நபர் கீதா கோபிநாத் ஆவார். ஐ.எம்.எப் வரலாற்றிலேயே தலைமைப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூரில் பிறந்த 47 வயதான கீதா, தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியாகப் பணியாற்றிய இவர் பினராயி விஜயன் தலைமையிலான தற்போதைய கேரள அரசின் பொருளாதார ஆலோசகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய ஐ.எம்.எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டைன் லகார்டே, 'உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் கீதாவும் ஒருவர். குறைகாண முடியாத அளவு கல்வித் தகுதி கொண்டவர். தலைமைப் பண்பை உடையவர். விரிவான சர்வதேச அனுபவம் கொண்டவர்' என்று தெரிவித்தார்.