நாகரிக மோகத்தால் உலகம் முழுவதும் செல்பி கலாச்சாரம் விஸ்பரூபம் எடுத்துள்ளது. செல்பி எடுப்பதற்காக இளைஞர்கள் மலையின் உச்சி, பாறைகளின் நுனி என ஆபத்தோடு விளையாடுகிறார்கள். இதனால் ஆபத்திலும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். இப்படியொரு சம்பவம் அர்ஜென்டினாவில் அரங்கேறியுள்ளது.
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லாரா ஜான்சன் என்ற 17 வயது பெண் ஒருவர் தனது தோழியை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய் வளர்த்து வந்துள்ளார்.
அந்த நாயின் நடவடிக்கைகள் கவரும் வண்ணம் இருந்ததால், அவற்றுடன் லாரா ஜான்சன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். பக்கத்தில் அவர் அமரும் வரை சும்மா இருந்த நாய், முகத்தின் பக்கம் செல்போனை எடுத்து வந்ததும், அவரின் முகத்தைக் கடித்துக் குதறியது.
இதனால் படுகாயமடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஊசி நரம்பு கொண்டு சுமார் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண் நாயுடன் செல்பி எடுத்த புகைப்படத்தையும், நாய் கடித்த பின்பு முகத்தில் தையல் போட்ட புகைப்படத்தையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் உலகம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது.