சிறிய படகு ஒன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 150 க்கும் அதிகமான அகதிகள் புலம்பெயர்ந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தால் கடலில் மூழ்கி 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கடந்த வாரம் ஸ்பெயின் நோக்கி சென்ற அகதிகள் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. அட்லாண்டிக் கடல் பரப்பில் உள்ள மவுரித்தானியா நாட்டின் நுவாதிபவ் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்த 85 பேர் மீட்கப்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் மேலும் 58 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். எரிபொருள் மற்றும் உணவைப் பெறுவதற்காக மவுரித்தேனிய கடற்கரையை அடைய நினைத்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அளவுக்கு அதிகமானோர் அந்த சிறிய படகில் அபாயகரமான வகையில் பயணித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.