அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது.
இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் பரபரப்பு உண்டானது. இந்நிலையில் நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் லோயர் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் சரணடைந்த டொனால்ட் டிரம்ப், நீதிமன்றத்திற்கு வெளியே நின்ற ஆதரவாளர்களிடம் கையசைத்து விட்டு ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.
விசாரணை முடிந்த பிறகு தனது ஆதரவாளர்களிடம் பேசுகையில், "எனக்கு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் நிரபராதி. நாட்டை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து பயப்படாமல் நாட்டை காப்பாற்ற நினைத்தது ஒன்றுதான் நான் செய்த ஒரே குற்றமாகும். தற்போது போலி வழக்கு விசாரணை ஒன்றை எதிர்கொண்டுள்ளேன். நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே இந்த வழக்குகள் விசாரணைகள் எல்லாம் நடைபெறுகின்றன. நான் முன்பை விட தற்போது உறுதியாக இருக்கிறேன்.
நாட்டை காப்பாற்றும் போராட்டத்தில் இருந்து என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. ஏன் பழி சுமத்தியும், அவதூறுகளை பரப்பியும் என்னை அழிக்க முயற்சி செய்கின்றனர். இருப்பினும் எனது லட்சியத்தை அடையும் முயற்சியில் உறுதியாக இருக்கிறேன். ஜோ பைடனின் ஆட்சியில், அணு ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளும் மூன்றாம் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது. சீனா, ஈரான், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் வடகொரியா நாடுகள் இணைந்துள்ளன. இது அழிவுக்கான கூட்டணியாகும். ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்கா நரகமாகி வருகிறது" என்றார்.