
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 3000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
அமெரிக்காவை பொறுத்தவரையில், இந்த கரோனா பாதிப்பு என்பது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பலியாகியுள்ளனர். கரோனாவால் கடும் பாதிப்பிற்கு உள்ளான அமெரிக்கா அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது பெய்துவரும் கடுமையான மழை அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெக்சிகன் மாநிலத்தில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக மிட்லேண்ட் மற்றும் ஆடன்வில் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அணையில் இருந்து வெள்ளம் ஆக்ரோஷமாக வெளியேறி வருகின்றது. 42 ஆயிரம் மக்கள் வசித்து வரும் அந்த மாகாணத்தை இந்த வெள்ளம் பெரும் சிரமத்திற்கு ஆட்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.