சீனாவின் பெய்ஜிங்கில் காரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள சூழலில், அந்நகரிலிருந்து செயல்படும் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தையிலிருந்து பரவ ஆரம்பித்த கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை இதுவரை பலி வாங்கியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களாக உலகின் பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் எனப் பாகுபாடின்றி அனைத்து நாடுகளையும் முடக்கிப்போட்டுள்ள கரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சீனாவின் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வந்தது. இந்நிலையில் சீனாவின், பெய்ஜிங்கில் உள்ள சந்தை ஒன்றை மையமாகக் கொண்டு மீண்டும் கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் அப்பகுதியில் உள்ள 90 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில், புதன்கிழமை வரை 137 பேருக்கு அறிகுறிகளுடன் கரோனா இருப்பதும், 150-க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறி இல்லாமல் கரோனா பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் அந்தச் சந்தைக்கு வந்து சென்றுள்ளதால், கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் சீனாவில் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று பெய்ஜிங் விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 1,235 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் எந்தவிதமான பிடித்தமும் இன்றி டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. இதேபோல ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.