தலைமையாசிரியர் மீது பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது வங்கதேச நீதிமன்றம்.
வங்கதேசத்தின் ஃபெனி நகரை சேர்ந்த நுஸ்ரத் ஜகான் ரஃபி என்ற மாணவி, அந்தப் பகுதியில் உள்ள மதராசா பள்ளியில் படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி தனது பள்ளியின் தலைமை ஆசிரியர் சிராஜ் உத்-தவுலா என்பவர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்றும் வெளியானது. இதனையடுத்து அந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ஆனால், நுஸ்ரத் பொய் புகார் அளித்ததாகக் கூறி, பள்ளி மாணவர்கள் சிலரும், வங்கதேச ஆளும் கட்சியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரும் தலைமை ஆசிரியர் தவுலாவை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சில நாட்களுக்கு பின் தேர்வு எழுத நுஸ்ரத் பள்ளிக்குச் சென்ற போது, மொட்டை மாடியில் வைத்து சக மாணவர்கள் மற்றும் சில உள்ளூர் அரசியல்வாதிகள் ஆகியோரால் கொடூரமாக எரித்து கொல்லப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்து, 2 பள்ளி மாணவிகள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய டாக்கா உயர்நீதிமன்றம், 16 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.