குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.
இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அதே போல் டொனால்ட் ட்ரம்ப், நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடன் இருந்த உறவை மறைக்க 2016 தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து, அவருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மான்ஹட்டன் கிராண்ட் ஜூரி, ட்ரம்ப் மீதான இந்த கிரிமினல் குற்றச்சாட்டை முன் வைத்தது. இவ்வழக்கில் ட்ரம்பிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் திடீரென அவருக்கு எதிராக சாட்சியளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் பலகட்ட விசாரணைக்கு பின், டொனால்ட் டிரம்பு குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, டொனால்ட் டிரம்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆனதால் ஜூலை 11ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா அதிபராக இருந்த ஒருவர் குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.