![trump](http://image.nakkheeran.in/cdn/farfuture/D8CIdvAYf09UMW2QGnuSiUVM4NZ2oiVp4f1ohsdgbfA/1599650831/sites/default/files/inline-images/trump-sad-final.jpg)
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் முதல்முதலாக கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயல்பு வாழ்க்கை பாதிப்பினால் பலநாடுகளின் பொருளாதார நிலை ஆட்டம் கண்டுவருகிறது. அரசுகளின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக பணக்காரர்களின் தனிநபர் சொத்து மதிப்பும் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை 400 அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் ஆண்டுதோறும் வழக்கமாக வெளியாகக் கூடிய ஒன்று. இந்தப் பட்டியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம், கரோனாதொற்று பொருளாதார ரீதியாக எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது.
குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தினை இழந்துள்ளார். இதற்கு அவர் முதலீடு செய்திருந்த நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததே காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த இழப்பின் மூலம் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் ட்ரம்ப் 77 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து 352-ஆவது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆண்டில் 3.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.