கரோனா பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும் என விளக்கும் வகையில் மருத்துவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தைக் கடந்துள்ள சூழலில், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 24,000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசின் பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிகமோசமான சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் இந்த கரோனா வைரஸ் மனிதனின் நுரையீரல் பகுதியைத்தான் கடுமையாகப் பாதிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நுரையீரல் எவ்வாறு இருக்கும் என்பதனை காணொளியாக உருவாக்கியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்.
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொராசி அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைவரான கீத் மோர்ட்மேன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் கொண்ட ஆரோக்கியமான 59 வயது ஆண் ஒருவரின் நுரையீரல் பாதிப்படைந்த பின் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. மருத்துவர் கீத் மோர்ட்மேன், ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியுடன் இந்த வீடியோவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தபின்னாவது மக்கள் இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.