உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்ட காலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தொடர்ந்து கடந்த 2022ல் ரஷ்யா - உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கத் தொடங்கி, தற்பொழுது சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக போரானது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை, உக்ரைன் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 கிலோ வெடி பொருட்களுடன் பறந்து வந்த ட்ரோன் ஒன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது. வெடி பொருட்களுடன் பறந்து வந்து அந்த ட்ரோன் ரஷ்ய அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடத்தவே அனுப்பப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய அதிபர் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல் முயற்சி என அந்நாட்டு அரசு தற்பொழுது குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதினை கொல்ல உக்ரைன் முயல்வதாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.