இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அடக்குமுறை இருந்து வருவதாக அமெரிக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் கடந்த ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இது குறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “சரியான தகவல் மற்றும் புரிதல் இல்லாத காரணத்தால் அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒருதலைபட்சமாக கருத்துகள் சொல்லப்பட்டுள்ளதால் அந்த அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.