
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நேற்று (02-04-25) நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்க பேசினர்.
12 மணி நேர தொடர் விவாதத்துக்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வருகின்ற நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இம்மசோதாவை எதிரித்திருந்தது. இந்நிலையில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்த அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.