சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்து, தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது கரோனா வைரஸ். உலகம் முழுவதும் 24 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 60,000- க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில், 1765 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தபோது ஹாங்காங்கில் இருந்து ஒரு கப்பல் வந்ததால் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் யோகஹாமா துறைமுகத்தில் 3700க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கும் ஜப்பான் பயணிகள் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேலும் பலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை ஜப்பான் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இந்த கப்பலில் 3,700 பேர் பயணித்த நிலையில், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 454 ஆக அதிகரித்துள்ளது.
இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.