Published on 02/05/2020 | Edited on 02/05/2020
கரோனா வைரஸ் இயற்கையானதா? அல்லது சீனாவால் உருவாக்கப்பட்டதா என்ற விவாதம் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 34 லட்சத்திற்கும் அதிகமானோரை பாதித்துள்ளது, 2.3 லட்சத்திற்கு அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. அமெரிக்காவில் 11 லட்சத்திற்கு அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 65,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவிடம், உலக நாடுகள் இழப்பீடு கோர வேண்டும் எனவும், சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் சீனாவை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் இயற்கையாகவே உருவாகியுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் அதிகாரி மைக்கல் ரயன் இதுகுறித்து கூறுகையில், "இந்த வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்படவில்லை. இயற்கையான பரிணாமத்திலேயே உருவாகியுள்ளது. இதனை மீண்டும் மீண்டும் பலமுறை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம்" என தெரிவித்துள்ளார்.