கடலில் சிக்கிக்கொண்ட இரு பெண்களை போர்ச்சுக்கல் நாட்டு அதிபர் காப்பாற்றியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கரோனா தொற்று காரணமாக போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுலாத்துறை கடுமையாக முடங்கியுள்ளது. எனவே சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா. அந்தவகையில், அல்கர்வே கடற்கரையில் பத்திரிகையாளர்களிடம் மார்செலோ பேசி கொண்டிருந்தார். அப்போது இரு பெண்கள் கடலில் சிக்கிக்கொண்டு உதவிக்காக கூச்சலிட்டனர்.
இதனைப் பார்த்த அதிபர் கடலில் இறங்கி அப்பெண்களை உடனடியாக காப்பாற்றினார். 71 வயதான அந்நாட்டு அதிபரின் இந்த துணிச்சலான செயல்பாடு நாட்டு மக்கள் பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடலில் தவித்த இருபெண்களையும் காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்த அவர், பின்னர் பாதுகாப்பு குறித்து அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.