பாகிஸ்தானில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேருக்கு சமூகப் பரவல் காரணமாக கரோனா பரவியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டுச் சுகாதாரத்துறையின் அறிக்கைப்படி, கடந்த 24 மணிநேரத்தில் 642 பேருக்கு அந்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது, மேலும், இதனால் 237 பேர் அந்நாட்டில் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியான பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேருக்கு சமூகப் பரவல் காரணமாக கரோனா பரவியிருக்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கரோனாவின் தாக்கம் அந்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சமூகப்பரவல் குறித்தான ஆய்வு முடிவுகள் அந்நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.