சீனாவில் ஹவுன் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 10000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலநாடுகள் சீனாவிற்கு செல்லும் தங்கள் நாட்டின் விமானங்களை நிறுத்தியுள்ளது. சீனாவின் தைவான் விமான நிறுவனமும் தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி, குடிநீர் உள்ளிட்ட சில பொருட்களை பயணிகளே எடுத்து வர வேண்டும் என்று விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஒருவர் பயன்படுத்திய பொருட்களினால் கொரோனா வைரஸ் பரவுவதாக கூறப்படுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.