சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிற்கு மருத்துவமனையில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக டேனெட் கில்ட்சுக்கு அடிவயிற்றில் வலி இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் திடீரென அதிகமாக வலி எடுக்க, அது சிறுநீரக கல் காரணமாக ஏற்பட்ட வலியாக இருக்கலாம் என நினைத்த அவர், அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் அங்கு சென்று சோதனை செய்து பார்த்தபோது அவர் 34 வாரங்கள் கர்ப்பமாக இருந்துள்ளது தெரிந்துள்ளது. அத்துடன் அந்த நேரத்தில் டேனெட் கில்ட்சுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்பதும் தெரிந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இந்த பிரசவத்தில் டேனெட் கில்ட்சுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், ஒரு பெண் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இந்த சம்பவத்தை பலரும் வியந்து பார்த்து வருகின்றனர்.