சமூகவலைதளங்களில் மிக முக்கியமானதான ஃபேஸ்புக் நிறுவனம் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய ஏதுவான 'ஃபேஸ்புக் பே' என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் பே, போன் பே போன்ற பண பரிவர்த்தனை தளங்களுக்கு போட்டியாக தற்போது ஃபேஸ்புக் நிறுவனமும் இந்த துறையில் கால்பதித்துள்ளது. இந்த ஃபேஸ்புக் பே மூலம் வாட்ஸ்அப், மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் உள்ள பயனர்கள், அதன் பயன்பாட்டில் இருந்து வெளியேறாமல், அவற்றின் வழியாகவே பண பரிவர்த்தனை செய்ய முடியும். பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பிரத்தியேகமாக பின் நம்பரோ அல்லது கை ரேகையோ பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்பவோ அல்லது பணம் பெறவோ இந்த சேவை அனுமதிக்கும் என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கவும், சினிமா டிக்கெட்டுகளை வாங்கவும் இந்த சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், மெசஞ்சர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நான்கில், எந்தெந்த செயலிகள் மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பதை பயனர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக் பேவுக்குள் பயனர்கள் மட்டுமே தங்கள் கட்டணம் மற்றும் பரிவர்த்தனை வரலாற்றைக் காண முடியும் என்றும், பணப்பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் நண்பர்களுடனோ அல்லது ஃபேஸ்புக் பக்கத்திலோ பகிரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.