அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சான்டியோகோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குறைப்பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்தது. தாயின் உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்னதாகவே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து அறுவைசிகிச்சை செய்து அந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
வெறும் 240 கிராம் எடை கொண்ட உள்ளங்கைக்குள் அடக்கும் அளவே பிறந்த அந்த குழந்தை ஒரு மணிநேரத்தில் இறந்துவிடும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அந்த குழந்தையின் தாய் பிடிவாதத்தால் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஒரு மணிநேரத்தில் இறந்து விடும் என கூறப்பட்ட குழந்தை மணிகளை கடந்து நாட்களில் அடியெடுத்து வைத்தது. ஒரு வாரம் போராடி தனது உயிரை காப்பாற்றிக்கொண்ட அந்த குழந்தை மருத்துவர்களின் மனதை கவர்ந்தது. அந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தனியாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இரவு பகல் பாராமல் குழந்தைக்கு சிகிச்சைகள் நடந்தன. ஒரு மாதகாலம் ஆன பிறகு அங்கிருந்த செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் அது செல்ல குழந்தையாக மாறியது. அதற்கு செபி என பெயரிட்டு அழைத்தனர். ஆறு மாத கால தொடர் போராட்டத்திற்கு பிறகு தற்போது அந்த குழந்தை இந்த உலகில் வாழும் அளவுக்கு தயாராகியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியின்றி சாதாரண குழந்தையாக மாற்றப்பட்டு தற்போது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 240 கிராம் எடையில் இருந்த சின்னஞ்சிறிய சிசு தாயுடன் நலமுடன் வீட்டுக்குச் செல்லும்போது 2.200 கிலோகிராம் எடை இருந்தது.
அந்த குழந்தையை தாயுடன் அனுப்பி வைக்கும் போது, அந்த குழந்தையை கவனமாகப் பார்த்துக்கொண்ட செவிலியர்களும், மருத்துவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் செபியை பார்த்துக்கொண்ட செவிலியர் இதுகுறித்து கூறுகையில், "உண்மையிலேயே இது கடவுளின் அதிசயம்தான். செபி சிறியவள்தான் தான், ஆனால் அவளின் தன்னம்பிக்கை வானளவு பெரியது. பிறந்தபோது ஆப்பிள் எடையில்தான் இருந்தாள். அவளுடைய படுக்கையில் இருக்கிறாளா என்பதுகூட தெரியாது. செபி அழும்போது அவளின் குரல்கூட வெளியே கேட்காது. செபி இன்று நலமுடன் இருப்பது இறைவனின் படைப்பில் அதிசயம்" எனத் தெரிவித்தார்.