அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்குத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது.
இத்தகைய சூழலில் தான் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியை சார்பாக தற்போதைய துணை அதிபரரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பைடன் வேட்பாளராக இருந்த போது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் ட்ரம்புக்கு நெருக்கடி இருப்பதாக அமெரிக்க அரசியலை உற்றுநோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பிரச்சாரங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள உலக பணக்காரரான எலான் மஸ்க், கமலா ஹாரிஸை கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகத்தையும், அமெரிக்காவையும் அவர் காப்பாற்றுவார். மாறாகக் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும். எனத் வார்த்தையைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.