உலகை அச்சுறுத்திவரும் கரோனாவிற்கெதிராக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இருப்பினும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலக நாடுகளுக்கு உதவும் பொருட்டு, 80 மில்லியன் தடுப்பூசிகளை அமெரிக்கா பிற நாடுகளுக்கு வழங்கும் என ஜோ பைடன் அறிவித்தார்.
இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்தின்கீழ், இந்தியாவிற்கும் தடுப்பூசி வழங்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்தது. இந்தநிலையில் அமெரிக்கா தற்போது இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை அளித்துள்ளது. ஆனால் இந்தியாவிற்கு இன்னும் தடுப்பூசி தரப்படவில்லை. இந்தநிலையில், இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்க இந்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ், "இந்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், தடுப்பூசிகளை விரைவாக அனுப்ப நாங்கள் தயாராக உள்ளோம்" என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "தடுப்பூசிகளை அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு நாடும், அந்நாட்டிற்குண்டான ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியிலான செயல்முறைகளை முடிக்க வேண்டும். தற்போது இந்தியா, தடுப்பூசிகளை நன்கொடையாக பெறுவது தொடர்பான சட்ட விதிகளை ஆராய மேலும் அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளது" என கூறியுள்ளார்.
மேலும் அவர், "இந்தியா சட்ட நடைமுறைகளை முடித்த பின்னர், இந்தியாவிற்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது விரைவாக தொடங்கும்" எனவும் கூறியுள்ளார்.