Skip to main content

ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற சில மணி நேரங்களில் இராஜினாமா!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

sweden pm

 

ஸ்வீடன் நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், அந்த நாட்டின் பிரதமரும், சமூக ஜனநாயக கட்சியின் தலைவருமான ஸ்டீபன் லோஃப்வென் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். இதனையடுத்து மாக்டலினா ஆண்டர்சன் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை மாக்டலினா ஆண்டர்சனுக்கு கிடைத்தது. ஆனால், பிரதமராகப் பதவியேற்ற 12 மணி நேரத்திற்குள் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

மாக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசு, நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தது. ஆனால், கூட்டணியில் இல்லாமல் அரசுக்கு ஆதரவு அளித்துவரும் மத்திய கட்சி, ஆளும் அரசின் வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டது. இதனால் அரசு கொண்டுவந்த வரவு செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த வரவு செலவு திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து, சமூக ஜனநாயக கட்சியின் கூட்டணியிலிருந்து பசுமை கட்சி வெளியேறியதால், மாக்டலினா ஆண்டர்சன் தலைமையிலான அரசு பெரும்பான்மை இல்லாமல் கவிழ்ந்தது. இதனையடுத்து மாக்டலினா ஆண்டர்சன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

மேலும், ஒற்றைக் கட்சி (சமூக ஜனநாயக) அரசின் பிரதமராக இருக்க தயாராக இருக்கிறேன் எனவும் மாக்டலினா ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் மத்திய கட்சி, இடது கட்சி, பசுமைக் கட்சி ஆகியவை மாக்டலினா ஆண்டர்சன் பிரதமராக ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் மாக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார். 

Next Story

நிலவி வந்த இழுபறி; பாகிஸ்தானுக்கு புதிய பிரதமர் அறிவிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Pakistan's new prime minister announced

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையே நாடு தவித்து வரும் நிலையில், அந்நாடு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீக் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. 

இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி  புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். அதன்படி, காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

தேர்தல் நடந்து ஐந்து நாட்கள் ஆன பிறகும், புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அந்த வகையில், நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.