முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேர், ஒமிக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்தியாவிலும் 200 பேருக்கு ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டெல்டா வகை கரோனவை ஒமிக்ரான் வகை கரோனா வேகமாக பரவுவதாகவும், உலகம் முழுவதும் கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளதாவது; முன்பு அதிகமாக பரவிய டெல்டாவை விட இந்த திரிபு (ஒமிக்ரான்) வேகமாக பரவுகிறது என்பதற்கு இப்போது ஆதாரம் உள்ளது. ஒமிக்ரான் ஒரு மிதமான திரிபு என்று தொடக்க நிலை ஆதாரங்களில் இருந்து முடிவு செய்வது புத்திசாலித்தனமற்றது. நாம் அனைவரும் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் அனைவரும் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிட விரும்புகிறோம். இயல்பு நிலைக்கு திரும்ப விரும்புகிறோம்.
தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரும், நிகழ்ச்சிகளை ரத்து செய்வது அல்லது தாமதப்படுத்துவது உட்பட மக்களைப் பாதுகாக்க பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்போது கொண்டாடிவிட்டு பின்னர் வருத்தப்படுவதை விட இப்போது (நிகழ்ச்சிகளை) ரத்து செய்துவிட்டு பின்னர் கொண்டாடுவது நல்லது. ரத்து செய்யப்பட்ட வாழ்க்கையை விட, ரத்து செய்யப்பட்ட நிகழ்வு என்பது சிறந்தது
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையிலும் 70 சதவீத பேருக்கு அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டால், 2022 ஆம் ஆண்டில் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவரலாம். 2019-ல் கரோனா பரவல் தொடங்கியதாக கருதப்படும் சீனா, தொற்றுநோய்களைச் சமாளிப்பதற்கான எதிர்காலக் கொள்கையை உருவாக்குவதற்கு உதவும் விதமாக, கரோனாவின் தோற்றம் குறித்த கூடுதல் தரவை வழங்க வேண்டும். இவ்வாறு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நெருங்கியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் கொண்டாட்டங்களை ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.