துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதற்கான துபாய் விமானப்போக்குவரத்து துறை அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்த சூழலில், தற்போது பாதுகாப்பு விதிமுறைகளை கடுமைப்படுத்தி விமானச் சேவைகளை வழங்க ஆரம்பித்துள்ளன சர்வதேச நாடுகள். அந்தவகையில் இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளுக்கு குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு கடந்த 15 ஆம் தேதி முதல் விமானபோக்குவரத்து துவங்கியது.
இதில் இந்தியாவில் இருந்துசென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதாக துபாய் விமானப்போக்குவரத்து துறை நேற்று அறிவித்தது. இந்நிலையில், துபாயின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்க தொடங்கியுள்ளது.