சீனாவின் வுஹான் பகுதியில் கடந்த ஒருவார காலமாகப் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படாத சூழலில் நேற்று, வுஹான் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கரோனாவால் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும், சீனாவில் புதிதாக 78 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் பகுதியிலிருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 16,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சீனாவின் வுஹான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக கரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நேற்று ஒருநாளில் மட்டும் சீனாவில் 78 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். மேலும், நேற்று மட்டும் சீனாவில் 7 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே வுஹான் அமைந்துள்ள ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் சீனாவில் சற்று தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாளில் மீண்டும் 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.