அமெரிக்காவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பொறுப்புகளில் 21 இந்தியர்களை நியமித்துள்ளார் பைடன்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் முறையாக அதிபர் மற்றும் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் பல்வேறு முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளனர் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். இதில் 21 இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளது இந்தியர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
கரோனா ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவராக டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் டாக்டர் அதுல் கவாண்டே அறிவிக்கப்பட்ட சூழலில், இந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த செலின் ராணியும் இடம்பெற்றிருந்தார். இந்தச் சூழலில், அருண் மஜும்தார் மற்றும் கிரண் அஹுஜா ஆகியோர் ஆட்சி மாற்றத்தைக் கவனிக்கும் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, அணு ஆயுதங்களை வடிவமைத்தல், உற்பத்தியாளர்கள் மற்றும் சோதனை செய்யும் எரிசக்தித் துறையைக் கையாளும் குழுத் தலைவராக மஜும்தார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவில் இயற்பியல் பேராசிரியரான ராமமூர்த்தி ரமேஷ் இடம்பெற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான அணியில்சுமோனா குஹா, தேசிய பாதுகாப்பு கவுன்சில் குழுவில் தில்பிரீத் சித்து மற்றும் பவ்னீத் சிங், வர்த்தக பிரதிநிதி மற்றும் வர்த்தகத் துறை குழுவில் அருண் வெங்கடராமன், பிரவினா ராகவன் மற்றும் ஆத்மான் திரிவேதி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதுதவிர, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குழுவில் ஆஷா எம். ஜார்ஜ், சுபஸ்ரீ ராமநாதன் ஆகியோரும், கல்வி, நுகர்வோர் நிதி பாதுகாப்பு பணியகம், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள், நீதி, தொழிலாளர் நலத்துறை, பெடரல் ரிசர்வ், மேலாண்மை மற்றும் பட்ஜெட், வேளாண்மை, தபால் சேவை ஆகிய துறைகளுக்கான குழுவில் முறையே ஷிதல் ஷா, அஸ்வின் வாசன், மீனா சேஷாமணி, ராஜ் தே, சீமா நந்தா மற்றும் ராஜ் நாயக், ரீனா அகர்வால், திவ்யா குமாரையா, குமார் சந்திரன் மற்றும் அனீஷ் சோப்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.