1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோயில் ஒன்று பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணம் ஸ்வாட் மாவட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இத்தாலியத் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டுள்ளனர். இதில், அப்பகுதியில் உள்ள குண்டாய் மலைப் பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்ட விஷ்ணு கோயில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்து சாஹி அரச வம்ச காலத்தில் கட்டப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் ராணுவ முகாம், கண்காணிப்புக் கோபுரங்கள் போன்றவை அமைந்திருந்ததற்கான அடையாளங்களும் காணப்படுகின்றன.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை, தற்போதைய கிழக்கு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை இந்து சாஹிகள் ஆட்சிசெய்து வந்தனர். இவர்களது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த கோயில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, பாகிஸ்தானில் இந்து சாஹி அரச வம்சத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.