
சென்னை மாநகரத்திற்குள் மூன்று ரவுடிகள் நுழைவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல ரவுடியாக இருக்கக்கூடிய ராக்கெட் ராஜா, நெற்குன்றம் சூர்யா, லெனின் ஆகிய மூன்று பேரும் சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை சென்னை காவல் ஆணையர் வெளியிட்டிருக்கிறார். நீதிமன்ற வழக்கு; காவல் நிலைய விசாரணை ஆகிய காரணங்களை தவிர்த்து மற்ற எந்த காரணங்களுக்காகவும் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் சென்னை மாநகரத்திற்குள் வருவதற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நகர காவல் சட்டம் 51 ஏ பிரிவின் படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களால் வன்முறை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.