
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த முதுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கேஷ்(25). இவர் கூலி வேலை பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. துர்கேஷ் கடந்த 2017ம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். துர்கேஷ் உடன் நண்பர்களாக சுற்றிவந்த பக்கத்து வீட்டுக்காரர் நட்ராஜ்(30) என்பவருக்கும் துர்கேஷ் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு துர்கேஷ்க்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. அப்போது அவர்களுக்குள் தகராறு வரவே, துர்கேஷ் மனைவியை நட்ராஜ் கர்நாடகா மாநிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது துர்கேஷ் இது தொடர்பாக பேரிகை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், துர்கேஷின் மனைவியை போலீஸார் பேரிகை காவல்நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் அவர்கள் வீட்டு பெரியோர்கள் பேசி துர்கேஷுடன் சேர்ந்துவாழ அறிவுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து துர்கேஷ் மனைவி, அவரது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த சமயத்தில், துர்கேஷ் மனைவியின் ஆண் நண்பரான நட்ராஜுக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த மது என்பவர் அவ்வப்போது துர்கேஷை சீண்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று விடியற்காலை துர்கேஷ் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, நட்ராஜ், மது மற்றும் அவரது நண்பர் ஒருவர் என மூவருமாக சேர்ந்து துர்கேஷின் வீட்டுக்குள் வீச்சரிவாளுடன் உள்ளே நுழைந்து, துர்கேஷின் கை மணி கட்டுகளை வெட்டி, முகத்திலும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி உள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட அலறல் சத்தத்தின் காரணமாக அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த துர்கேஷை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் நட்ராஜ், மது ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து துர்கேஷின் மனைவியிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.