
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே மின் வாரியத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று இரவு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மின்வாரியத்திற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் இருந்த பகுதியில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்பொழுது தடுமாறி வாகனத்துடன் பள்ளத்தில் விழுந்தனர். இதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உடனடியாக போலீஸாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்துத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இதுபோன்ற பள்ளங்களைக் கடக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.