Skip to main content

இன்ஸ்டா காதல்; அத்துமீறிய வீடியோ காலால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Youth arrested for extorting money from girl
வேல்முருகன்

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த  16 வயது   பள்ளி மாணவி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பெற்றோரின் செல்போனில், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.  இன்ஸ்டாகிராம் மூலம் பல நண்பர்களிடம் அவர் உரையாடுவதும்,  வீடியோ காலில் பேசுவதையும் வாடிக்கையாக வைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர்களும் செல்போன் பயன்படுத்துவது இக்காலத்தில், சாதாரண விஷயம்  என்பதாலும்,  பள்ளிகளில் கூட ஆன்லைன் வகுப்புகள் அவ்வப்போது எடுப்பதனாலும், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.

 

இந்த நிலையில்  வீட்டிலிருந்து,  நகை காணாமல்  போய் உள்ளது.  அதேபோன்று, வங்கி கணக்குகளில் இருந்தும் பணம் குறைந்துள்ளது. இதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்து மாணவியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்பொழுது, மாணவிக்கு ஆன்லைன் கேம் வழியாக இன்ஸ்டாகிராம் மூலம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இசக்கிமுத்து  என்பவரின் மகன் வேல்முருகன் (22) என்பவருடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேல்முருகன் மற்றும் பள்ளி மாணவி இணைந்து, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளனர்.  நாளடைவில் இவர்களுடைய நட்பு இன்ஸ்டாகிராம் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுக்கு பணம் தேவைப்படுகிறது எனக்கூறி மாணவியிடம், வேல்முருகன் அவ்வப்பொழுது  பணம் கேட்டு தொந்தரவு செய்ய துவங்கியுள்ளார்.

 

மேலும், ஒருபுறம் ஆன்லைன் விளையாட்டு, என்று சென்று கொண்டிருந்தாலும், இருவரிடமும் நெருக்கமும் ஆன்லைன் மூலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. வீடியோ காலிலும் எல்லை மீறி  இருவரும் பேசி வந்துள்ளனர்.  இந்தநிலையில்  அடிக்கடி பணம் கேட்டு வேல்முருகன் தொந்தரவு செய்வதால், மாணவி  இனி பணம் தர முடியாது என   தெரிவித்துள்ளார். அப்பொழுது வீடியோ காலில் எல்லை மீறி பேசிய ஸ்கிரீன்ஷாட்களை வைத்துக்கொண்டு வேல்முருகன் மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த 12 சவரன் நகையை கொரியர் மூலமாகவும் வேல்முருகன்  மாணவியை ஏமாற்றியும், மிரட்டியும் பெற்றுள்ளார்.   

 

இதனை அடுத்து மாணவியின் தாய் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரியின் அடிப்படையில், தனிப்படை போலீசார் மொபைல் சிக்னல் வழியாக, திருநெல்வேலியில் வேல்முருகன் இருப்பதை உறுதி செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை  கைது செய்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்போன் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார், வேல்முருகன் மீது போக்சோ, மிரட்டி பணம் பறித்த உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

 

ஆன்லைன் வழியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெற்றோர்களும் மாணவ, மாணவிகளைக் கண்காணிக்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்