
பட்டப்பகலில் கடத்தப்பட்ட இளைஞரை பெங்களூருவில் தனிப்படை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வரும் ஜெயராம் என்பவரை கடந்த மே 2- ஆம் தேதி அன்று ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது. இது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலைத் தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் இருப்பதை அறிந்து காவலர்கள் அங்கு விரைந்த போது, ஜெயராமை காரிலேயே விட்டுவிட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஜெயராமை மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர். ஜெயராமனின் மளிகைக் கடையில் வேலைப் பார்த்த வடமாநிலத்தைச் சேர்ந்த சாலாராம் என்பவர் குட்கா கடத்தலில் ஈடுபட்டதும், குட்கா கடத்தி கும்பலுக்கு அவர் 20 லட்சம் ரூபாய் கொடுக்காததால் சாலாராமைக் கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
கடத்தல் கும்பல் வந்த நேரத்தில் கடையில் சாலாராம் இல்லாததால், ஜெயராமைக் கடத்திப் பணம் பறிக்க முயன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.